ரெயில் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை
சிதம்பரத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் விரக்தி அடைந்த மாணவர் உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கே.ஆர்.எம். நகர் 8-வது கிராஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் ஜீவா(வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 வணிகவியல் பிரிவு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியான பிளஸ்-1 தேர்வு முடிவில் ஜீவா 600-க்கு 280 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். குறைந்த மதிப்பெண் பெற்றதால் விரக்தி அடைந்த அவர் இரவு சிதம்பரம் வல்லம்படுகையில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தின் ஓரம் நின்று கொண்டிருந்தார்.
தற்கொலை
அப்போது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த ரெயில் முன்பு ஜீவா திடீரென பாய்ந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சிதம்பரம் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஜீவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
உருக்கமான கடிதம் சிக்கியது
இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஜீவா அவரது வீட்டில் எழுதி வைத்த கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில், நான் ஜீவா என்னோட அம்மா, பாட்டி என்னை ரொம்ப கஷ்டப்பட்டு படிக்க வச்சாங்க. நான் 10-ம் வகுப்பு படிக்கும் போதே குறைந்த மதிப்பெண் பெற்றேன். இதனால் பிளஸ்-1 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம் என்று நினைத்தேன். ஆனால் பிளஸ்-1 பொதுத்தோ்விலும் குறைந்த மதிப்பெண் பெற்றேன். நான் கல்வி கற்க தகுதியில்லாதவன், அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என் இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை. அம்மா, பாட்டியையும், தம்பியையும் நல்லா பாத்துக்கோ. நீ உன் உடம்பையும் பாத்துக்கோ என்று கூறப்பட்டு இருந்தது.