குட்டையில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவன் சாவு
ஆத்தூர் அருகே குளிக்க சென்றபோது 8-ம் வகுப்பு மாணவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.
ஆத்தூர்
ஆத்தூர் அருகே குளிக்க சென்றபோது 8-ம் வகுப்பு மாணவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.
8-ம் வகுப்பு மாணவன்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள செல்லியம்பாளையம் லட்சுமண சமுத்திரம் ரேஷன் கடை தெருவை சேர்ந்தவர் முனியப்பன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி காந்திமதி. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் இருந்தனர். இதில் மூத்த மகன் ஆகாஷ் (வயது 14), செல்லியம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் அவன் வீட்டில் இருந்து வந்தான்.
இந்தநிலையில் நேற்று ஆகாஷ், வீட்டின் அருகே அழகாபுரம் பகுதியில் உள்ள குட்டைக்கு குளிக்க சென்றான். அங்கு சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் நிரம்பி இருந்தது.
தண்ணீரில் மூழ்கி பலி
நீச்சல் தெரியாத ஆகாஷ், அந்த குட்டையில் இறங்கி குளித்தான். அப்போது திடீரென அவன் ஆழமான பகுதிக்கு சென்றான். இதனால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். அக்கம் பக்கத்தினர் அவனை மீட்க முயன்றும், பலனளிக்கவில்லை.
இதுகுறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, ஆகாஷ் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு ஆகாஷ் உடல் மீட்கப்பட்டது. மாணவனின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண் கலங்க செய்தது.
சோகம்
போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குட்டையில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.