தடுப்பு கட்டையில் கார் மோதி மாணவி பலி


தடுப்பு கட்டையில் கார் மோதி மாணவி பலி
x

வடலூரில் தடுப்பு கட்டையில் கார் மோதிய விபத்தில் மாணவி பரிதாபமாக இறந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கடலூர்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி எஸ்.கே.எஸ். நகரை சேர்ந்தவர் அன்புசெழியன் (வயது 46). பைனான்சியர். இவரது மனைவி செல்வி (41), இவர்களுக்கு 13 வயதில் ஜெயவரதன் என்கிற மகனும், 15 வயதில் தக்ஷனா என்கிற மகளும் உள்ளனர். இதில் தகசனா நெய்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார்.

இந்த நிலையில் அன்புசெழியன் தனது குடும்பத்தினருடன் காரில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் அதே காரில் அவர்கள் நேற்று முன்தினம் ஊர் திரும்பினர்.

காரை அன்புசெழியன் ஓட்டினார். வடலூர் ஓ.பி.ஆர். கல்லூரி அருகே நேற்று காலை 4.30 மணி அளவில் வந்தபோது, கார் அன்புசெழியனின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவில் இருந்த தடுப்புக்கட்டையில் மோதியது.

இந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே மாணவி தக்ஷனா பரிதாபமாக இறந்தார். அன்புசெழியன், செல்வி, ஜெயவரதன் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இது குறித்த தகவலின் பேரில் வடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக கடலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story