கண்மாயில் மூழ்கி மாணவி பலி
தாய் கண் முன்னே கண்மாயில் மூழ்கி மாணவி பரிதாபமாக இறந்தாள்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காமராஜர் நகரை சேர்ந்தவர் பெரியசாமி. அவருடைய மனைவி யுவன்யா. இந்த தம்பதியின் மகள் அமிர்தஸ்ரீ (11). இவள், அங்குள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று இவள், தனது தாய் யுவன்யாவுடன் வேலம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்க்கு துணி துவைக்க சென்றாள்.
அப்போது எதிர்பாராத விதமாக அமிர்தஸ்ரீ கண்மாய்க்குள் தவறி விழுந்தாள். சிறிதுநேரத்தில் அவள் தண்ணீரில் மூழ்கினாள். இதைக்கண்ட யுவன்யா, சிறுமியை காப்பாற்ற முயன்றார். இருப்பினும் அவரால் முடியவில்லை. தன்கண் முன்னே மகள் தண்ணீரில் முழ்கியதை கண்டு யுவன்யா கதறி அழுதார். பின்னர் இதுகுறித்து நத்தம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் ½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு கண்மாயில் இருந்து சிறுமி மீட்கப்பட்டாள். இதனையடுத்து அவளை சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அமிர்தஸ்ரீ பரிதாபமாக இறந்தாள். இதுகுறித்து நத்தம் போலீஸ்-இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.