மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதி மாணவன் பலி


மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதி மாணவன் பலி
x

கடமலைக்குண்டு அருகே மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில், தந்தை கண்முன்னே மாணவன் பரிதாபமாக இறந்தான்.

திண்டுக்கல்

3-ம் வகுப்பு மாணவன்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே உள்ள சிதம்பரவிலக்கு கிராமத்தை சேர்ந்தவர் மாவீரன் (வயது 38). விவசாயி. அவருடைய மகன் கிருஷ்னேஷ்வரன் (9). இவன், கோம்பைத்தொழு அரசு தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை இவன் காய்ச்சலால் அவதிப்பட்டான்.

இதனால் தனது மகனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, கடமலைக்குண்டுவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் மாவீரன் அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை பெற்று விட்டு மீண்டும் அவர்கள் 2 பேரும் சிதம்பரவிலக்கு கிராமம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளின் முன்புறத்தில் கிருஷ்னேஷ்வரனை அமர வைத்து, மோட்டார் சைக்கிளை மாவீரன் ஓட்டினார்.

பரிதாப சாவு

கடமலைக்குண்டு டாஸ்மாக் கடை அருகே உள்ள பழங்குடியினர் காலனி பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அந்த சாலையில் உள்ள வளைவில் மோட்டார் சைக்கிள் திரும்பியது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், நிலை தடுமாறி சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மின்சார கம்பம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் முன்புறத்தில் அமர்ந்திருந்த கிருஷ்னேஷ்வரன் மின்கம்பத்தின் மீது தூக்கி வீசப்பட்டான்.

இதில் தலையில் இருந்து ரத்தம் கொட்டியபடி கிருஷ்னேஷ்வரன் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பரிதாபமாக இறந்தான். இதேபோல் கை, கால்கள் உடைந்த நிலையில் பலத்த காயங்களுடன் மாவீரன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

தீவிர சிகிச்சை

இதுகுறித்து தகவல் அறிந்த கடமலைக்குண்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் கிருஷ்னேஷ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் உயிருக்கு போராடி கொண்டிருந்த மாவீரனை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் மாவீரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேதம் அடைந்த மின்கம்பம்

இதற்கிடையே மோட்டார் சைக்கிள் மோதிய வேகத்தில், மின்கம்பம் உடைந்து சாலையோரம் சாய்ந்து நின்றது. அப்போது அந்த வழியாக வாகனங்கள் எதுவும் வராததால், பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கடமலைக்குண்டு மின்வாரிய ஊழியர்கள் அங்கு விரைந்தனர். உடனடியாக அவர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். அதன்பிறகு சேதம் அடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு, அதே இடத்தில் புதிதாக மின்கம்பத்தை நட்டு சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தந்தை கண்முன்னே மகன் துடி, துடித்து இறந்த சம்பவம் கடமலைக்குண்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story