மின்சாரம் தாக்கி மாணவன் சாவு; சோகத்தில் விஷம் குடித்து தாத்தா தற்கொலை


மின்சாரம் தாக்கி மாணவன் சாவு; சோகத்தில் விஷம் குடித்து தாத்தா தற்கொலை
x

கோகுல் நிவாஸ். இளங்கோவன்.

தினத்தந்தி 11 Aug 2023 1:00 AM IST (Updated: 11 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி அருகே மின்சாரம் தாக்கி மாணவன் பரிதாபமாக இறந்தான். இதனால் ஏற்பட்ட சோகத்தில் சிறுவனின் தாத்தாவும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி அருகே மின்சாரம் தாக்கி மாணவன் பரிதாபமாக இறந்தான். இதனால் ஏற்பட்ட சோகத்தில் சிறுவனின் தாத்தாவும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

8-ம் வகுப்பு மாணவன்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள காமேஸ்வரம் வேடர்காடு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மனைவி தேன்மொழி. இவர்களுடைய மகன் கோகுல் நிவாஸ்(வயது 14), இவன், காமேஸ்வரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் இரவு அங்கு உள்ள பன்னீர்செல்வத்தின் பழைய வீட்டில் இருந்து புதிய வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த கோகுல் நிவாஸ் மீது எதிர்பாராதவிதமாக மின் வயர் பட்டதில் மின்சாரம் பாய்ந்து அவன் தூக்கி வீசப்பட்டான்.

சோகத்தில் குடும்பத்தினர்

இதில் மயங்கி விழுந்து கிடந்த கோகுல் நிவாசை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், கோகுல்நிவாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கோகுல்நிவாஸ் மின்சாரம் தாக்கி இறந்ததால், குடும்பத்தினரும், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தனர்.

தாத்தாவும் சாவு

இந்த நிலையில் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்து இருந்த கோகுல்நிவாசின் தந்தை வழி தாத்தா இளங்கோவன்(75) வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) திடீரென குடித்தார்.

இதன் காரணமாக மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பேரன் இறந்த சோகத்தில் தாத்தா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே குடும்பத்தில் 3 ஆண்கள் 4 நாட்களுக்குள் உயிரிழந்த சோகம்

கோகுல்நிவாசின் தந்தை பன்னீர்செல்வம் கடந்த 6-ந் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். தந்தை இறந்ததால் கோகுல்நிவாஸ், அவருடைய தாத்தா இளங்கோவன் மற்றும் உறவினர்கள் மிகுந்த வேதனையில் இருந்தனர். அந்த வேதனை மறைவதற்குள் நேற்று முன்தினம்(9-ந் தேதி) கோகுல்நிவாஸ் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தான். அடுத்தடுத்து மகனையும், பேரனையும் பறிகொடுத்த இளங்கோவன் வேதனையில் அன்று இரவு விஷம் குடித்தார். நேற்று அதிகாலை அவரும் பரிதாபமாக இறந்தார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாத்தா, தந்தை, மகன் என 3 ஆண்கள் 4 நாட்களுக்குள் அடுத்தடுத்து இறந்த சோகத்துக்கு ஆறுதலாக வார்த்தகளே இல்லை என கூறி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கண்ணீர் விட்டனர்.


Next Story