குடகனாற்றில் மூழ்கி மாணவர் சாவு
நண்பர்களுடன் மீன்பிடித்தபோது, குடகனாற்றில் மூழ்கி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
செம்பட்டி அருகே உள்ள முன்னிலைகோட்டை ஊராட்சி ஏசுபாளையத்தை சேர்ந்தவர் அந்தோணி. கொத்தனார். அவருடைய மகன் மரியகவுதம் (வயது 19). இவர், திண்டுக்கல்லில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் தனது நண்பர்களுடன், வீரக்கல்லை அடுத்த வீ.கூத்தம்பட்டி பார்வதி அம்மன் கோவில் அருகே குடகனாற்று தடுப்பணையில் மரியகவுதம் தூண்டில் போட்டு மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கால் வழுக்கி ஆற்றுக்குள் விழுந்த மரியகவுதம் தண்ணீரில் மூழ்கினார்.
இதனைக்கண்ட அவருடைய நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து தண்ணீரில் குதித்து அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்கு முன்பு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த செம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மரியகவுதத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.