பேச்சிப்பாறை அணையில் மூழ்கி மாணவர் பலி


பேச்சிப்பாறை அணையில் மூழ்கி மாணவர் பலி
x
தினத்தந்தி 30 July 2023 12:15 AM IST (Updated: 30 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பேச்சிப்பாறை அணையில் மூழ்கி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

குலசேகரம்:

பேச்சிப்பாறை அணையில் மூழ்கி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

மாணவர்

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளம் தும்பமண் பேராணிக்கல் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவருடைய மனைவி ஷாலியா. இவர்களுடைய மகன் ரோஜன் ராஜூ (வயது 19), களியக்காவிளை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிசியோதெரபி படித்து வந்தார்.

இவர் புலியூர்சாலையைச் சேர்ந்த ஆன்றோ என்ற மாணவரின் வீட்டில் தங்கிய நிலையில் கல்லூரிக்கு சென்று வந்தார். இந்தநிலையில் விடுமுறை நாளான நேற்று கல்லூரியை சேர்ந்த 9 மாணவர்கள் மோட்டார் சைக்கிள்களில் சுற்றுலாவாக பேச்சிப்பாறை அணைக்கு வந்தனர்.

அணையில் மூழ்கி சாவு

அங்கு அணையின் தேக்கு காடு நீர்ப்பிடிப்பு பகுதிக்குச் சென்று மதியம் பிரியாணி சமைத்து சாப்பிட்டனர். பின்னர் ரோஜன் ராஜூ உள்பட 4 மாணவர்கள் அணையில் இறங்கி குளித்தனர்.

ஆர்வமிகுதியில் 4 பேரும் மரங்கள் நிற்கும் பகுதி வரை நீச்சலடித்து சென்று மீண்டும் திரும்பினர். அப்போது ரோஜன் ராஜூ திடீரென நீச்சல் அடிக்க முடியாமல் தளர்ந்த நிலைக்கு சென்றுள்ளார். இதனால் அவர் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். உடனே மற்ற 3 மாணவர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் தண்ணீரை அதிகமாக குடித்ததால் அவர் மயங்கிய நிலையில் இருந்தார்.

பின்னர் பேச்சிப்பாறை பள்ளி முக்கு சந்திப்புக்கு கொண்டு வந்து அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மீண்டும் 108 ஆம்புலன்சு மூலம் குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர், ரோஜன் ராஜூ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

சோகம்

இதனை அறிந்த சக மாணவர்கள் கதறி அழுதனர். இது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பேச்சிப்பாறை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்தார்.

பலியான மாணவனின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ஷாலியா மட்டும் கஷ்டப்பட்டு தனது மகனை படிக்க வைத்தார். இந்தநிலையில் மகன் அணையில் மூழ்கி இறந்த சம்பவம் அவருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story