'என் மரணத்திற்கு முழு காரணம் ஆன்லைன் ரம்மி தான்' - ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு ரெயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவன் தற்கொலை
திருச்சியில் கல்லூரி மாணவன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி,
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மலையாண்டிபட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரின் மகன் சந்தோஷ் (வயது 23). சந்தோஷ் மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார்.
இதனிடையே, சந்தோஷ் ஆன்லைனில் பணம் கட்டி ரம்மி விளையாடி வந்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அவர் அடிமையாகியுள்ளார். ஆன்லைன் ரம்மியில் தொடர்ந்து பணத்தை இழந்து வந்த சந்தோஷ் வீட்டில் இருந்த 3 பவுன் நகையை விற்று அந்த பணத்தை வைத்தும் விளையாடியுள்ளார். பின்னர், கால்பவுன் தங்க மோதிரம் ஒன்றையும் விற்று அந்த பணத்திலும் ஆன்லைனில் ரம்மி விளையாடியுள்ளார். அதில், தோல்வியடைந்து அனைத்து பணத்தையும் இழந்துள்ளார்.
பணம், நகையை இழந்தது குறித்து குடும்பத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன் கேட்டுள்ளனர். இதனால், அவர் கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த சந்தோஷ் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில், மன உளைச்சலின் உச்சத்தால் வீட்டை விட்டு வெளியேறி சந்தோஷ் நேற்று இரவு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
மணப்பாறையில் ரெயில் நிலையம் அருகே நாளங்காடிக்கு பின் பகுதியில் நேற்று இரவு ரெயில் முன் பாய்ந்து சந்தோஷ் தற்கொலை செய்துகொண்டார். ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சந்தோஷின் உடல், கை, தலை தனித்தனியே கிடந்துள்ளது.
தற்கொலை செய்துகொண்ட சந்தோஷின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்துகொள்வதற்கு முன் சந்தோஷ் நேற்று இரவு தனது வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்துள்ளார்.
அதில், என்னுடைய மரணத்திற்கு முழு காரணம் ஆன்லைன் ரம்மி தான். அதில் நான் அடிமையாகி அதிக பணம் இழந்ததால் என் உயிரை மாய்த்துக்கொள்கிறேன்' என ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.