பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை


பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் அருகே அரசு பள்ளி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதில் பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி

பர்கூர்:

பர்கூர் அருகே அரசு பள்ளி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதில் பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பிளஸ்-2 மாணவர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா சிகரலப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கப்பல்வாடி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கப்பல்வாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 265 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளியில் சக்கில்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் - சசிகலா தம்பதியின் மகன் கோபிநாத் (வயது 17) என்பவர் அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ்-2 படித்து வந்தார். இதனிடையே நேற்று காலை வழக்கம் போல அவர் பள்ளிக்கு சென்றார். மாலை 3 மணி அளவில் இடைவேளை நேரத்தில் மாணவர் கோபிநாத் வெளியே வந்தார்.

மாணவர்கள் மோதல்

பள்ளி மைதானத்தில் அவரும், சக மாணவர் ஒருவரும் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அந்த மாணவர் தனது கையில் வைத்திருந்த தைலம் ஒன்றை மாணவர் கோபிநாத்தின் தலையில் தடவியதாக தெரிகிறது. இதுதொடர்பாக கோபிநாத் மற்றும் அந்த மாணவர் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த கோபிநாத் அந்த மாணவரை தாக்கியதாக கூறப்படுகிறது. உடனே அந்த மாணவர் கோபிநாத்தை திருப்பி அடித்ததாக தெரிகிறது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கோபிநாத்திற்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அருகில் இருந்த சக மாணவர்கள் பார்த்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

பரிதாப சாவு

இதையடுத்து ஆசிரியர்கள் விரைந்து வந்து மாணவர் கோபிநாத்தை மீட்டு சிகிச்சைக்காக பர்கூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது மாணவர் கோபிநாத் வழியிலேயே இறந்து விட்டது தெரியவந்தது. இதனால் ஆசிரிய, ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது குறித்து பர்கூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா மற்றும் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மாணவர் கோபிநாத் இறந்த தகவல் அறிந்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதபடி பள்ளிக்கு வந்தனர்.

போலீசார் குவிப்பு

மேலும் ஏராளமான பொதுமக்களும் பள்ளி முன்பு திரண்டனர். இதையடுத்து பர்கூர் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்றனர். தகவல் அறிந்து கல்வித்துறை அதிகாரிகளும் விரைந்து வந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அனைத்து மாணவ, மாணவிகளும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கோபிநாத்தின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

பள்ளி மாணவர் இறந்ததால் பர்கூர் அருகே கப்பல்வாடி பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. அங்கு ஏதும் அசம்பாவிதங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் கோபிநாத்தை சக மாணவர் தாக்கியதில் உயிர் இழந்தாரா? அல்லது வலிப்பு நோய் பாதிப்பால் இறந்தாரா? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பர்கூர் அருகே பள்ளியில் சக மாணவர் தாக்கியதில் பிளஸ்-2 மாணவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story