மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகக்கூடாது
மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகக்கூடாது
அனுப்பர்பாளையம்
எதிர்கால இந்தியாவை நிர்ணயிக்கும் மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகக்கூடாது என்று மாநகர போலீஸ் துணை கமிஷனர் அபிநவ்குமார் கூறினார்.
போதை பொருட்களுக்கு தடை
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள் அருகில் பீடி, சிகரெட், புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பாபு உத்தரவின் பேரில் மாநகரில் பள்ளி, கல்லூரிகள் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் மாணவர்கள் போதை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
நாளைய எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள்
இந்த நிலையில் திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த வி.கே.அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமையாசிரியர் (பொறுப்பு) ராஜதுரை வரவேற்றார். அனுப்பர்பாளையம் போலீஸ் சரக உதவி கமிஷனர் நல்லசிவம் முன்னிலை வகித்தார். இதில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் அபிநவ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
அப்போது மாணவ-மாணவிகளான இன்றைய இளைய தலைமுறையினரே நாளைய எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியவர்கள். அத்தகைய மாணவர்கள் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும். போதைப் பொருட்களுக்கு அடிமையாகக்கூடாது. எனவே அதில் இருந்து வெளிவர வேண்டும். பெற்றோர் கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர். அதை நினைத்து நன்றாக படித்து எதிர்கால இந்தியாவை சிறப்பாக மாற்ற வேண்டும் என்றார். இதில் அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் உள்பட போலீசார், மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
அரசு பள்ளி
இதுபோல் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவுபடி வீரபாண்டி இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடுவம்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே போதைப்பொருள் குறித்த விளக்கவுரையாற்றினர். இதனைத் தொடர்ந்து பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.