பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்


பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்
x

கோடை விடுமுறை முடிந்து மாணவ-மாணவிகள் நேற்று பள்ளிக்கு வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்:

கோடை விடுமுறை முடிந்து மாணவ-மாணவிகள் நேற்று பள்ளிக்கு வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

பள்ளிகள் திறப்பு

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு கடந்த மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜூன் மாதம் 13-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும என அறிவிக்கப்பட்டிருந்தது.இதனையொட்டி கடந்த சில நாட்களாக பள்ளி வகுப்பறைகள் மற்றும் வளாகத்தை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. மேலும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து நோட்டு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

உற்சாகத்துடன் வந்த மாணவர்கள்

தமிழக அரசு அறிவித்தபடி தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அதேபோல நாகை மாவட்டத்தில் 691 பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது காலை முதலே புதிய சீருடை அணிந்து மாணவ-மாணவிகள் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர். பெரும்பாலான பள்ளிகளில் நுழைவு வாயிலில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.

ஆரத்தி எடுத்த ஆசிரியர்கள்

நாகை கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியர் பாலு தலைமையில் ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பள்ளிக்கு வந்து மாணவ-மாணவிகள் தங்களது நண்பர்களை சந்தித்து நலம் விசாரித்து கொண்டனர்.

நாகூர்

நாகூர் நகராட்சி உயர்நிலை பள்ளிக்கு வந்த மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றார். தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை கூறினார்.தங்களது பிள்ளைகளை பள்ளியில் விட பெற்றோர்கள் சிலர் தங்களது இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்திருந்தனர்.

மாலை அணிவித்து...

வேதாரண்யம் பகுதிக்கு உட்பட்ட பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. அப்போது வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை இந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, பள்ளி மேலாண்மை குழுவைச் சேர்ந்தவர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன.

திருவள்ளுவர் சிலைக்கு மாலை

மேலும், வேதாரண்யம் மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள வடமழை ரஸ்தா ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 95 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி திறக்கப்பட்டதைெயாட்டி கோட்டாட்சியர் பவுலின் கலந்துகொண்டு பள்ளி வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story