பிறந்த நாளுக்கு தாய், சாக்லெட் வாங்கி கொடுக்க மறுத்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


பிறந்த நாளுக்கு தாய், சாக்லெட் வாங்கி கொடுக்க மறுத்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

பிறந்த நாளுக்கு தாய் சாக்லெட் வாங்கி கொடுக்க மறுத்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

கன்னங்குறிச்சி:

பிளஸ்-1 மாணவி

சேலம் கன்னங்குறிச்சி 7-வது வார்டுக்குட்பட்ட சரவணா நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருடைய மகள் தமிழ்நேயா (வயது 16). இவர் கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். தமிழ்நேயாவுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிறந்த நாளாகும். இதனால் அவர் உறவினர்கள் மற்றும் தோழிகளுக்கு சாக்லெட் கொடுக்க வேண்டும் என்று தாயிடம் தெரிவித்தார்.

அதற்கு ராஜேஸ்வரி, நீ என்ன சின்ன குழந்தையா?, என கூறி சாக்லெட் வாங்கி கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தமிழ்நேயா, நேற்று காலை வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

போலீசார் விசாரணை

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தமிழ்நேயா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கன்னங்குறிச்சி போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். பின்னர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாணவி தமிழ்நேயா தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று பிறந்த நாளை கொண்டாட இருந்த நிலையில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story