கல்லூரியில் சேர முடியாமல் தவித்த மாணவி - நடவடிக்கை எடுத்த கலெக்டர்-எம்.பி.க்கள்
கல்லூரியில் சேர முடியாமல் தவித்த மாணவிக்கு கலெக்டர்-எம்.பி.க்கள் எடுத்த நடவடிக்கையால் கல்லூரியில் சேர்ந்தார்
திருப்பரங்குன்றம்,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட சாமநத்தம் ஊராட்சியில் வசித்து வருபவர் வேல்முருகன். இவரது மனைவி பிரேமா. இவர்கள் அப்பள கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு நந்தினி மற்றும் ஸ்வேதா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். நந்தினி நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 546 மதிப்பெண் பெற்றுள்ளார். தேர்வு முடிவுகள் வெளியான சமயத்தில் நந்தினிக்கு அம்மை நோய் ஏற்பட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் மதுரை மீனாட்சி கல்லூரியில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்து இருந்தார். ஆனால் அதில் சில விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கவுன்சிலிங்கிற்காக நந்தினிக்கு அழைப்புவரவில்லை. இதையடுத்து நந்தினி கல்லூரிக்கு சென்று பார்த்தபோது விண்ணப்ப பதிவில் அவரது பெயர் இடம்பெறவில்லை. மீனாட்சி கல்லூரிக்கு மட்டுமே நந்தினி விண்ணப்பித்து இருந்ததால் அவர் கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட கலெக்டருக்கு நந்தினி மனு கொடுத்தார். மேலும் அவர் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் ஆகியோரிடம் தனக்கு கல்லூரியில் சேருவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் 2 எம்.பி.க்களும் கலெக்டரிடம், மாணவி நந்தினிக்கு கல்லூரியில் சேர வாய்ப்பு ஏற்படுத்தி தருமாறு கேட்டனர். அதன்பின் மாணவி நந்தினிக்கு மீனாட்சி அரசு கலை அறிவியல் கல்லூரியில் இடம் ஒதுக்கி கல்லூரியில் சேருவதற்கு கலெக்டர் சங்கீதா நடவடிக்கை மேற்கொண்டார். அதன் பயனாக நந்தினி கல்லூரியில் சேர்ந்தார். இதுதொடர்பாக நந்தினி கூறும்போது, அம்மை நோயால் பாதிக்கப்பட்ட எனக்கு கலெக்டரால் மீனாட்சி கல்லூரியில் இடம் கிடைத்தது. அதற்கு உதவிய எம்.பி.க்கள் வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் மற்றும் கலெக்டருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.