100 சதவீத மாணவர் சேர்க்கையை உறுதி செய்யபள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிவருகிற 11-ந் தேதி வரை நடக்கிறது
தர்மபுரி மாவட்டத்தில் 100 சதவீத மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய பள்ளி செல்லா மற்றும் பள்ளி இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு பணி வருகிற 11-ந் தேதி வரை நடக்கிறது.
இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பள்ளி செல்லா குழந்தைகள்
ஒவ்வொரு ஆண்டும் 6 வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளி செல்லா குழந்தைகள், பள்ளி இடை நின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிய சிறப்பு கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. இதில் கண்டறியப்படும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் சிறப்பு பயிற்சி மையங்கள் மூலம் கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 2022-2023- ம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு பணி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
கணக்கெடுப்புக்கான விவரங்கள் அனைத்தையும் உள்ளீடு செய்து கணக்கெடுப்பு மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள செல்போன் செயலி மூலம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
100 சதவீத மாணவர் சேர்க்கை
வருகிற ஜனவரி மாதம் 11-ந்தேதி வரை எந்த ஒரு குடியிருப்பும் விடுபடாத வகையில் வீடு வீடாக சென்று இந்த கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. ஒன்றிய அளவில் கணக்கெடுப்பில் களப்பணியாளர்களாக பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை பயிற்சியாளர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், கல்வி தன்னார்வலர்கள், சுய உதவி குழுக்கள் மற்றும் தன்னார்வல தொண்டு நிறுவன பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பள்ளிகளில் 100 சதவீதம் மாணவர்கள் சேர்க்கையை உறுதி செய்யும் வகையில் பள்ளி செல்லா குழந்தைகள், பள்ளி இடை நின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் இந்த கணக்கெடுப்பின் மூலமாக கண்டறியப்படுகிறார்கள்.
அறிவுசார் குறைபாடு
பார்வையின்மை, உடல் இயக்க குறைபாடு, செவித்திறன் குறைபாடு, தொழுநோயிலிருந்து குணமடைந்தவர்கள், குள்ளத்தன்மை, அறிவுசார் குறைபாடு, மனநோய், புற உலக சிந்தனை குறைபாடு அல்லது மன இறுக்கம், மூளை முடக்கு வாதம், தசை சிதைவு நோய், நாள்பட்ட நரம்பியல் குறைபாடு, குறிப்பிட்ட கற்றல் குறைபாடு, திசு பன்முக கடினமாதல், மொழித்திறன் குறைபாடு, தலசீமியா, ஹீமோபோலியா, நடுக்கு வாதம் உள்ளிட்ட பன்முக குறைபாடுகளை இந்த கணக்கெடுப்பு களப்பணி மூலம் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பு பணிக்கு தொடர்புடைய அனைத்து துறையினரும் உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.