போக்சோவில் கைது செய்த ஆசிரியரை விடுதலை செய்யக்கோரி மாணவ-மாணவிகள் போராட்டம்


போக்சோவில் கைது செய்த ஆசிரியரை விடுதலை செய்யக்கோரி மாணவ-மாணவிகள் போராட்டம்
x

தோகைமலை அருகே போக்சோவில் கைது செய்த ஆசிரியரை விடுதலை செய்யக்கோரி அரசு பள்ளி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கரூர்

ஆசிரியர் கைது

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே கூடலூர் ஊராட்சி பொம்மநாயக்கன்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பணியாற்றி வரும் அறிவியல் ஆசிரியர் மருதை (வயது 59) என்பவர் 6, 7, 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து பள்ளி தலைமையாசிரியை ெகாடுத்த புகாரின்பேரில், குளித்தலை அனைத்து மகளிர் போலீசார், ஆசிரியர் மருதை மீது போக்ேசா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போராட்டம்

இதையடுத்து நேற்று பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் போக்சோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மருதையை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், அதுவரை பள்ளிக்குள் செல்ல மாட்டோம் எனக் கூறி வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை ஆர்.டி.ஓ. புஷ்பா தேவி, குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர், தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாவட்ட கலெக்டர் உங்கள் கோரிக்கைகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, சட்டரீதியான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்தார்.மேலும் பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்கினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மாணவ-மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைக்குள் சென்றனர். இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story