அனைத்து பஸ்களும் நின்று செல்ல வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்
வேப்பந்தட்டை அரசு கலைக்கல்லூரி முன் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டம்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நேற்று காலை திடீரென 2-ம் ஆண்டு மாணவர் முகமது ஜமால் தலைமையில் மாணவ-மாணவிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்லூரி முன் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் செல்லும் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும், கல்லூரி தொடங்கும் நேரத்திலும் கலைந்து செல்லும் நேரத்திலும் அதாவது காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதலாக பஸ் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் மற்றும் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ராஜா ஆகியோர் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.