கடலூர் மாவட்டகால்பந்து மையத்தில் பயிற்சி பெற மாணவர்கள் தேர்வுவருகிற 29-ந் தேதி நடக்கிறது
கடலூர் மாவட்ட கால்பந்து மையத்தில் பயிற்சி பெற மாணவர்கள் தேர்வு வருகிற 29-ந் தேதி நடக்கிறது.
மத்திய அரசின் கேலோ இந்தியா திட்ட நிதிஉதவியில் தொடக்க நிலை கால்பந்துப் பயிற்சிக்கான எஸ்.டி.ஏ.டி. விளையாட்டு மையம், கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் பயிற்சி பெற மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
கால்பந்து விளையாட்டில் ஆர்வம் உள்ள, 2023-24-ம் கல்வியாண்டில் 6-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம். தேர்வு செய்யப்படும் மாணவ-மாணவிகளுக்கு தினசரி விளையாட்டு பயிற்சி அளிக்கப்படுவதுடன், பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளவும் அழைத்துச் செல்லப்படுவர்.
எனவே, கடலூர் மாவட்ட கேலோ இந்தியா கால்பந்து விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற விருப்பம் உள்ள கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தாங்கள் கல்வி பயில்வதற்கான ஏதாவது ஒரு ஆதாரத்துடன் வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு வந்து, கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறும் தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.