அரசு நிதி உதவி பெறும் பள்ளியை மாணவிகள் முற்றுகை
திண்டிவனம் அரசு நிதி உதவி பெறும் பள்ளியை மாணவிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டிவனம்,
திண்டிவனம் மேம்பாலம் அருகில் புதுச்சேரி செல்லும் சாலையில் அரசு நிதி உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி வெற்றி பெறும் மாணவிகள் பள்ளி நிர்ணயித்துள்ள மதிப்பெண்களை பெறவில்லையென்றால் அவர்கள் அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்க விரும்பும் பாடங்களை கொடுப்பதில்லை. மாறாக பள்ளி நிர்வாகம் கொடுக்கும் பாடங்களை மாணவிகள் படிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
அதனை ஏற்கவில்லையென்றால் வேறு பள்ளிக்கு சென்று படிக்குமாறு மாணவிகளை பள்ளி நிர்வாகம் வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது அதேபோல் இந்தாண்டும்மாணவிகள் அந்த பள்ளியில் விரும்பும் பாடங்களை தேர்ந்தெடுத்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கேட்டபோது, பள்ளி நிர்வாகம் உரிய பதிலை அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தை
இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் அந்த அரசு உதவிபெறும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெற்றோர்கள் கூறுகையில், நாங்கள் எங்களது பிள்ளைகளை 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை இங்குதான் படிக்க வைத்தோம். ஆனால் தற்போது பிளஸ்-1 படிக்க இடம் வழங்க மறுத்துவருகிறார்கள் என்று தெரிவித்தனர். அதனை கேட்ட போலீசார், இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதனை ஏற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.