ஆசிரியர்கள் பணியிடை நீக்கத்தை கண்டித்து மாணவர்கள் 5 மணி நேரம் சாலைமறியல்
சேவூர் பள்ளியில் சிகரெட் புகைத்த மாணவனை அடித்த ஆசிரியர்கள் மீது நடடிக்கை எடுத்ததை கண்டித்து மாணவ, மாணவிகள் காலாண்டு தேர்வை புறக்கணித்து பெற்றோருடன் 5 மணி நேரம் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி
சேவூர் பள்ளியில் சிகரெட் புகைத்த மாணவனை அடித்த ஆசிரியர்கள் மீது நடடிக்கை எடுத்ததை கண்டித்து மாணவ, மாணவிகள் காலாண்டு தேர்வை புறக்கணித்து பெற்றோருடன் 5 மணி நேரம் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆசிரியர்கள் பணியிடைநீக்கம்
ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சிகரெட் புகைத்து மாணவிகள் மீது ஊதிய ராட்டிணமங்கலம் காலனி பகுதியை சேர்ந்த மாணவனை ஆசிரியர்கள் ஜெ.திலிப் குமார், ஜெ.வெங்கடேசன், ஜெ. நித்தியானந்தம், பி.பாண்டியன் ஆகியோர் கண்டித்து அடித்துள்ளனர். இதனை கண்டித்து மாணவனின் பெற்றோர், உறவினர்கள் விடுதலைசிறுத்தைகள் கட்சியினருடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக ஆசிரியர்கள் ஜெ.திலீப் குமார், கே. வெங்கடேசன் ஆகிேயாரை பணியிடை நீக்கம் செய்தும், ஆசிரியர்கள் ஜெ.நித்தியானந்தம், பி.பாண்டியன் ஆகியோரை வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்தும் முதன்மை கல்வி அலுவலர் கணேச மூர்த்தி உத்தரவு பிறப்பித்தார்.
தற்போது சேவூர் அரசு பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு நடக்கிறது. ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை கண்டித்து நேற்று மாணவ, மாணவிகள் காலாண்டு தேர்வை புறக்கணித்து ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் பஸ் நிறுத்தத்தில் தரையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். காலை 8.45 மணிக்கு தொடங்கிய போராட்டம் பகல் 2 மணி வரை 5 மணி நேரத்துக்கு மேல் நீடித்தது.
போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை
இதற்கிடையில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர் சர்மிளா தரணி, ஒன்றிய குழு துணைத் தலைவர் கே.டி.ராஜேந்திரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.அன்பழகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் எழிலரசி சுகுமார், குமார், முதன்மை கல்வி அலுவலர் கணேச மூர்த்தி, ஆரணி கல்வி மாவட்ட அலுவலர் சந்தோஷ், தாசில்தார் ஜெகதீசன், பள்ளி தலைமை ஆசிரியை மீனாட்சி ஆகியோரும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் எந்த ஒரு முடிவும் எட்டப்படாததால் போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் பகல் 2:15 மணியளவில் ஆயுதப்படை போலீசாருடன் அங்கு வந்து சமரசம் செய்தார்.
பின்னர் பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் பேசுகையில், மாணவர்களிடம் சாலை மறியல் என்ற தவறான கண்ணோட்டத்தை புதைக்க வேண்டாம். நீங்கள் முறையாக மனு கொடுங்கள். கலெக்டரிடம் பேசி உங்கள் கோரிக்கை குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார். அதன்பின் காலாண்டு தேர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) எழுதலாம் என கல்வித்துறை தெரிவித்ததையடுத்து அவர்களுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
மற்றொரு தரப்பினர் மறியல்
இதனிடையே இந்த மறியலை கண்டித்தும் தவறு செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்தது சரிதான் எனக் கூறியும் மற்றொரு தரப்பினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார், அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவங்களால் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.