மாணவ- மாணவிகள் வகுப்பை புறக்கணித்து தாலுகா அலுவலகத்தை முற்றுகை
குறவன் எஸ்.சி. சாதி சான்றிதழ் கேட்டு திருப்பத்தூர்தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவிலும் போராட்டம் நீடித்ததால் அங்கேயே சமையல் செய்தனர்.
முற்றுகை போராட்டம்
திருப்பத்தூர் தாலுகா கொரட்டி அருகே உள்ள பஞ்சனம்பட்டி மற்றும் நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, உள்ளிட்ட பகுதிகளில் படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பட்டியல் வகுப்பு சான்று கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட அனைவருக்கும் குறவன் எஸ்.சி. சாதி சான்றிதழ் வழங்கக்கோரி தமிழ் பழங்குடி குறவன் சங்கம் சார்பில் நேற்று பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
அதற்கு போலீசார் அனுமதி மறுக்கப்பட்டதால் தாலுகா அலுவலகம் முன்பு ரமேஷ் மற்றும் ரவிக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமையல் செய்தனர்
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் கோட்டாட்சியர் லட்சுமி, தாசில்தார் சிவப்பிரகாசம், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் ஆகியோர் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் இரவு வரை தொடர்ந்தது.
ஆன்லைனில் விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக இங்கேயே பட்டியல் இன (எஸ்.சி) சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கூறினார்கள். அதற்கு வருவாய் துறை அதிகாரிகள் வருகிற 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் அந்தந்த பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்தி உண்மை தன்மை கண்டறிந்து உடனடியாக சாதி சான்றிதழ் வழங்கப்படும் என கூறினார்கள்.
ஆனால் அதற்கு அவர்கள் உடன்படவில்லை. தொடர்ந்து அங்கேயே இரவு சமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி மாணவ மாணவிகள் அங்கே தங்கி உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.