கருப்பு பட்டை அணிந்து பள்ளிக்கு வந்த மாணவர்கள்
புதிய வகுப்பறை கட்டிடம் கட்டக்கோரி கருப்பு பட்டை அணிந்து பள்ளிக்கு மாணவர்கள் வந்தனர்.
சாயல்குடி,
கடலாடி அருகே ஆதஞ்சேரி கிராமத்தில் மீனவர்கள், கூலி தொழிலாளர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.அந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கடந்த 42 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய சேதமடைந்த பள்ளி கட்டிடத்தில் கல்வி கற்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த பள்ளி கட்டிடம் தற்போது சேதமடைந்து உள்ளதால் மழைக்காலத்தில் மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலை உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி புதிதாக வகுப்பறை கட்டிடம் கட்ட கோரி ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர், பள்ளி கல்வித்துறை, தமிழக முதல்வர் தனிப்பிரிவு ஆகியோருக்கு ஆதஞ்சேரி கிராமத்தின் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர், பள்ளி நிர்வாகம், கிராம பொதுமக்கள் சார்பில் பலமுறை புகார் மனுக்களை அளித்துள்ளனர். இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தாங்கள் கருப்பு பட்டை அணிந்ததோடு, தங்களது குழந்தைகளுக்கும் கருப்பு பட்டை அணிவித்து பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். வகுப்பறையில் மாணவர்கள் கருப்பு பட்டை அணிந்த நிலையில் பாடங்களை கவனித்தனர். ெதாடர்ந்து பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்கள் அடுத்த கட்ட போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.