திருக்குறள் முற்றோதல் போட்டிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


திருக்குறள் முற்றோதல் போட்டிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 17 Sept 2023 12:15 AM IST (Updated: 17 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்குறள் முற்றோதல் போட்டிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

கடலூர்

ஒவ்வொரு ஆண்டும் 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. இந்த திருக்குறள் முற்றோதல் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள், திறனறி குழுவினரால் திறனாய்வுசெய்து தேர்ந்தெடுக்கப்பட்டதும் பரிசு பெறுவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்வார்கள். இந்த திறனாய்வு கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் துறையினரால் நடத்தப்படும்.

இதில் பரிசு பெறுவதற்கு 1330 திருக்குறட்பாக்களையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவராக இருத்தல்வேண்டும். இயல் எண், பெயர், அதிகாரம் எண், பெயர், குறள் எண், பெயர் போன்றவற்றை தெரிவித்தால் அதற்குரிய திருக்குறளைக் கூறும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

கூடுதல் தகுதி

திருக்குறளின் அடைமொழிகள், திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள், திருக்குறளின் சிறப்புகள் ஆகியவற்றை அறிந்தவராக இருக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளியில் பயில்பவராக இருத்தல் வேண்டும். அரசு, அரசு உதவிபெறும், தனியார் மற்றும் மத்திய அரசு போன்ற பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்குபெறலாம்.

தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெறும் இப்பரிசை, இதற்கு முன்னர் பெற்றவராக இருத்தல் கூடாது. திருக்குறளின் பொருளும் அறிந்திருப்பின் கூடுதல் தகுதியாக கருதப்பெறும். எனவே திருக்குறள் முற்றோதும் திறன் படைத்த மாணவர்கள் https://tamilvalarchithurai.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் 30.10.2023-க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவல் கடலூர் கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story