பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:--
பள்ளி- கல்லூரி விடுதிகள்
விழுப்புரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், கள்ளர் சீரமைப்பு, சிறுபான்மையினர் மாணவர்களுக்காக பள்ளி விடுதிகள் 24-ம், மாணவிகளுக்காக 5 விடுதிகளும், கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. மாணவர்களுக்காக 3-விடுதிகளும், மாணவிகளுக்காக 3-ம் செயல்பட்டு வருகின்றன.
பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளும், கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிப்புகளில் படிக்கும் மாணவ- மாணவிகளும் சேர தகுதியுடையவர் ஆவர். பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ- மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.
விண்ணப்பிக்கலாம்
இவ்விடுதிகளில் சேர பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும், இருப்பிடத்தில் இருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி, மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ- மாணவிகள், விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்தோ, இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 30-ந் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை 31-7.2022-க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கும்போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்களை அளிக்கலாம். அல்லது விடுதியில் சேரும்போது இச்சான்றிதழை அளிக்கலாம். ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு விடுதியிலும் மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்களை எக்காலத்திலும் எந்த நேரத்திலும் நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக்கொள்ளவும், அவர்களது படிப்பு முடியும் வரை விடுதிகளில் தங்கி படிக்கவும் அனுமதிக்கலாம். எனவே மாணவ- மாணவிகள், அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையலாம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.