கயத்தாறில் அரசுபஸ் ஊழியர்களுடன்மாணவர்கள்வாக்குவாதத்தால் பரபரப்பு
கயத்தாறில் அரசுபஸ் ஊழியர்களுடன்மாணவர்கள்வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கயத்தாறு:
கயத்தாறில் மாணவர்கள் ஏறுவதற்கு முன்பு அரசு பஸ்சை வேகமாக எடுத்த டிரைவர், கண்டக்டருடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ேபாலீசார் தலையிட்டு சமரசம் செய்து வைத்தனர்.
பஸ் வசதி இல்லை
கயத்தாறில் இருந்து தினமும் காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு 420 மாணவ, மாணவிகள் கோவில்பட்டிக்கும், 468 மாணவ, மாணவிகள் நெல்லைக்கு பஸ்களில் சென்று படித்து வருகின்றனர். இது தவிர அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களும், பொதுமக்களும் தினமும் ஏராளமானோர் நெல்லை, கோவில்பட்டி பகுதிக்கு சென்று வருகின்றனர். ஆனால், காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்றும், நெல்லை-கோவில்பட்டி இருமார்க்கத்திலும் இயக்கப்படும் அரசு, தனியார் பஸ்கள் கயத்தாறு பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.
மாணவர்கள் வாக்குவாதம்
இதுவரை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் கயத்தாறு பகுதி பொதுமக்கள், குறிப்பாக மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று காலை சுமார் 6 மணியிலிருந்து ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கயத்தாறு பஸ் நிலையத்தில் காத்திருந்தனர். இந்த நிலையில் காலை 8 மணிக்கு நெல்லையில் இருந்து கோவில்பட்டிக்கு செல்லும் அரசு பஸ் கயத்தாறு புதிய பஸ் நிலையத்திற்கு வந்தது. ஏற்கனவே அந்த பஸ்சில் பயணிகள் இருந்த நிலையில், கயத்தாறில் காத்திருந்த மாணவ, மாணவிகள் முண்டியடித்து கொண்டு பஸ்சில் ஏறினர். அப்போது டிரைவர் பஸ்சை எடுத்துள்ளார். இதனால் மாணவ, மாணவிகள் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். உடனடியாக மற்றவர்கள் கூச்சலிட்டு பஸ்சை நிறுத்தினர். தொடர்ந்து டிரைவர், கண்டக்டரிடம் மாணவ, மாணவிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் சமரசம்
தகவல் அறிந்த கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிலிங்கம் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் டிரைவர், கண்டக்டரை கண்டித்த அவர், பயணிகள் பஸ்சில் ஏறுவதை கவனித்து எடுக்க அறிவுரை கூறி சமரசம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து அந்த பஸ்சில் மாணவ, மாணவிகள் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் மேற்கொண்டனர். பெரும்பாலான மாணவிகள் பஸ்சில் ஏறமுடியாமல் வீடுகளுக்கு திரும்பி ெசன்றனர். கயத்தாறில் தொடரும் இப்பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகமும், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளும் உரிய தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.