கள்ளிமந்தையத்தில் 4 வழிச்சாலையை ஆபத்தான முறையில் கடந்து செல்லும் மாணவ-மாணவிகள்


கள்ளிமந்தையத்தில் 4 வழிச்சாலையை ஆபத்தான முறையில் கடந்து செல்லும் மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 20 Sept 2023 2:30 AM IST (Updated: 20 Sept 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

கள்ளிமந்தையத்தில் 4 வழிச்சாலையை ஆபத்தான முறையில் மாணவ-மாணவிகள் கடந்து செல்கின்றனர். இதனால் அங்கு நடை மேம்பாலம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையத்தில், புங்கவலசு செல்லும் சாலையில் திருப்பதி அருள்நெறி அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அதன் அருகில் கள்ளிமந்தையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. திருப்பதி அருள்நெறி பள்ளியில் கள்ளிமந்தையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் பள்ளி அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்தநிலையில் பள்ளிக்கூடத்துக்கும், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், அங்குள்ள ஒட்டன்சத்திரம்-தாராபுரம் நான்கு வழிச்சாலையை கடந்து தான் செல்ல வேண்டும். இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் பொதுமக்கள் ஆபத்தான முறையில் நான்கு வழிச்சாலையில் கடந்து சென்று வருகின்றனர். நான்கு வழிச்சாலையில் தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. அதிலும் சில வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே இப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் நலன் கருதி நடை மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story