கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்கள் தர்ணா போராட்டம்
கொ,பட்டி அரசு பள்ளிக்கு கட்டிடம் கட்டி தரக்கோரி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தியாகதுருகம் ஒன்றியம் புதுஉச்சிமேடு அருகே கொ.பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 35 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த பள்ளியின் கட்டிடம் பலத்த சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதையடுத்து மாணவர்களின் நலன் கருதி அந்த பள்ளி கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. இருப்பினும் அதற்கு பதில் புதிய கட்டிடம் கட்டிக்கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதன் காரணமாக கடந்த 5 மாதங்களாக அதே பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சொந்தமான சாவடி கட்டிடத்தில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் மாணவர்களுக்கு தேவையான கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அங்கு இல்லை. மேலும் பள்ளிக்கு தேவை யான ஆசிரியர்களும் நியமனம் செய்யப்படவில்லை.
தர்ணா போராட்டம்
இதனால் அருகில் உள்ள பள்ளிகளில் இருந்து ஒரு நாளைக்கு ஒரு ஆசிரியர், கொ.பட்டி கிராமத்துக்கு வந்து மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்து வருகின்றனர். இப்படி பள்ளிக்கு வேறு, வேறு ஆசிரியர்கள் வருவதால் மாணவர்கள் சரியான முறையில் கல்வி கற்க முடியாமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் நேற்று தங்களது குழந்தைகளுடன் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள், கொ.பட்டி ஊராட்சி ஒன்றியப்பள்ளிக்கு அடிப்படை வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்ட வேண்டும், பள்ளிக்கு என்று தனியாக ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும் என கோரி அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அங்கிருந்த போலீசார் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து மாணவர்கள் தங்களது பெற்றோருடன் கலெக்டரை சந்தித்து தங்களது கோரிக்கை குறித்த மனுவை அளித்தனர். மனுவை பெற்ற அவர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.