மாணவர்கள் கல்லூரி காலத்தை வீணாக்காதீர்கள்; டி.ஐ.ஜி. முத்துசாமி பேச்சு


மாணவர்கள் கல்லூரி காலத்தை வீணாக்காதீர்கள்; டி.ஐ.ஜி. முத்துசாமி பேச்சு
x

மாணவ-மாணவிகள் கல்லூரி காலத்தை வீணாக்காதீர்கள் என்று முத்துரங்கம் கலைக்கல்லூரியில் நடந்த போட்டி தேர்வு விழிப்புணர்வு முகாமில் வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி பேசினார்.

வேலூர்

மாணவ-மாணவிகள் கல்லூரி காலத்தை வீணாக்காதீர்கள் என்று முத்துரங்கம் கலைக்கல்லூரியில் நடந்த போட்டி தேர்வு விழிப்புணர்வு முகாமில் வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி பேசினார்.

போட்டி தேர்வு விழிப்புணர்வு முகாம்

வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி மற்றும் வெற்றி தமிழா சார்பில் போட்டி தேர்வு விழிப்புணர்வு முகாம் முத்துரங்கம் கல்லூரியில் நடந்தது. வேலூர் வணிகவரித்துறை உதவி கமிஷனர் அனுவித்யா, அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி நிறுவன முதல்வர் டி.தங்கராஜன், வேலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உதவி இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கழக செயல் இயக்குனர் ராம.செல்வம் முகாமை தொடங்கி வைத்து 'எளிது... எளிது-போட்டி தேர்வு' என்ற தலைப்பில் பேசினார். முத்துரங்கம் கல்லூரி முதல்வர் அ.மலர் வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளராக வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-

சாதாரண ஏழை குடும்பத்தில் படிப்பறிவு இல்லாத தாய், தந்தைக்கு பிறந்து தற்போது வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வருகிறேன். இதற்கு காரணம் கல்வி தான். நான் கல்வி கற்கவில்லை என்றால் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது. அந்த கல்வி கற்கும் வாய்ப்பு இப்போது உங்களுக்கு கிடைத்திருக்கிறது. எனவே மாணவ-மாணவிகள் கல்லூரி காலத்தை வீணாக்காதீர்கள். கல்லூரிக்கு வந்து ஜாலியாக இருந்துவிட்டு செல்வோம் என்று நினைக்க கூடாது. இந்த 3 ஆண்டுகளில் கல்விக்காக நீங்கள் எப்படி உழைக்கிறீர்களோ, அதுபோன்று தான் உங்கள் வாழ்க்கை அமையும்.

லட்சியம் இருக்க வேண்டும்

ஏழை குடும்பத்தை சேர்ந்த பலர் இங்கு கல்வி பயின்று வருகிறீர்கள். உங்களின் அடுத்த தலைமுறையை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வது உங்கள் கையில் தான் உள்ளது. இதற்கு கல்வி மிகவும் அவசியம். மாணவர்கள் ஒரு இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அனைவரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அரசுப்பணியில் உயர் அதிகாரிகளாக வர வேண்டும் என்று இல்லை. ஆசிரியர், ராணுவம், போலீஸ், வியாபாரி, விவசாயி என்று ஏதாவது ஒரு லட்சியம் இருக்க வேண்டும்.

அந்த லட்சியத்தில் தெளிவாக இருக்க வேண்டும். அதில் சிறந்து விளங்க வேண்டும். எந்த லட்சியமும் இல்லாதவர்கள் உயிருள்ள பிணத்துக்கு சமமானவர்கள். கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாணவர்கள் தங்களின் அறிவையும், தலைமை பண்பையும் வளர்த்து கொள்ள வேண்டும். 3 ஆண்டுகள் கல்வி கற்கும் சமயத்தில் பல்வேறு தகுதிகள் உடையவர்களாக உங்களை மாற்றி கொள்ள வேண்டும்.

இவ்வாறு டி.ஐ.ஜி. பேசினார்.

ஆங்கிலம் ஒரு தடையல்ல...

அதைத்தொடர்ந்து 'போட்டி தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி' என்ற தலைப்பில் ஒளிப்பட காட்சியுடன் கேரளா மற்றும் லட்சத்தீவு செய்தி-மக்கள் தொடர்பு அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் வி.பழனிச்சாமியும், 'போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள ஆங்கிலம் ஒரு தடையல்ல' என்ற தலைப்பில் திண்டுக்கல் தனியார் கலைக்கல்லூரி பேராசிரியர் மனோகரன் ஆகியோர் பேசினார்கள்.

முகாமில் தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை கருத்தாளர் ஆல்பர்ட் பெர்னாண்டோ, கல்லூரி துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் இயற்பியல் துறைத்தலைவர் சா.மாரிமுத்து நன்றி கூறினார்.


Next Story