ஆசிரிைய தாக்கியதால் மாணவனுக்கு பார்வை பாதிப்பு: டாக்டர்கள் பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


ஆசிரிைய தாக்கியதால் மாணவனுக்கு பார்வை பாதிப்பு: டாக்டர்கள் பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

ஆசிரியை தாக்கியதில் கண்பார்வை பாதித்த மாணவனுக்கு இழப்பீடு கோரிய வழக்கில் டாக்டர்கள் பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


ஆசிரியை தாக்கியதில் கண்பார்வை பாதித்த மாணவனுக்கு இழப்பீடு கோரிய வழக்கில் டாக்டர்கள் பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மாணவன் கண் பாதிப்பு

தென்காசி சாம்பவர் வடகரை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எனது மகன் மகிஷ், கடந்த 2014-ம் ஆண்டில் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வகுப்பை முறையாக கவனிக்காததால் கணித ஆசிரியை இரும்பு ஸ்கேலால் தாக்கியதில் எனது மகனின் இடது கண்ணில் காயம் அடைந்தார். இதில் எனது மகனின் கண் பார்வை பாதிக்கப்பட்டது.

இதனை அறிந்த ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர், என் மகன் கண் சிகிச்சைக்கு ஆகும் மருத்துவ செலவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்து புகார் தெரிவிக்க வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்தனர். இதனால் நானும் எந்த ஒரு புகாரும் அளிக்கவில்லை.

இந்நிலையில் 2 ஆண்டுகள் ஆகியும் அவர்கள் கூறியது போன்று எந்த ஒரு மருத்துவ செலவும் செய்யவில்லை. சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நான் போலீசாரிடம் புகார் அளித்தேன். ஆனால் அவர்களும் அந்த புகார் குறித்து தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இழப்பீடு

பின்னர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன் அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனாலும் எந்த ஒரு தீர்வும் இது வரை கிடைக்க வில்லை. எனவே ஆசிரியை தாக்கியதில் கண் பார்வை பாதிக்கப்பட்ட எனது மகனுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு விசாரித்தார்.

முடிவில், மனுதாரரை பொறுத்தவரை ஆசிரியை தாக்கியதால் தனது மகனின் பார்வையில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இது அவரின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால் உரிய இழப்பீடு வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

பரிசோதிக்க உத்தரவு

எனவே மனுதாரரின் மகனை நெல்லையில், கண் மருத்துவமனை ஒன்றில் டாக்டர்கள் பரிசோதித்து அவரது இடது கண் பார்வை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டு வழக்கை வருகிற 21-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story