மாணவர்கள் களப்பயணம்
மாணவர்கள் களப்பயணம் மேற்கொண்டனர்
பாவூர்சத்திரம்:
தேசிய தபால் தினத்தையொட்டி, பாவூர்சத்திரம் அருகே அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ. நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள், ஆலங்குளம் துணை தபால் நிலையத்துக்கு களப்பயணம் மேற்கொண்டனர். துணை தபால் நிலைய தலைமை அலுவலர் செல்வராஜ் வரவேற்றார். தபால் துறையில் அன்றாட பணிகள், கடிதம் எழுதுதல், படிவங்களை பூர்த்தி செய்தல், விரைவு தபால் பதிவு செய்தல், மணியார்டர் அனுப்புதல், பார்சல் சேவை, வங்கி வசதி, சேமிப்பு கணக்கு தொடங்குவது குறித்து தபால் நிலைய உதவியாளர் சுப்புலட்சுமி விளக்கி கூறினார். கடிதங்களை பிரிக்கும் முறை, கடிதங்களை உரியவர்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.
ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் குறித்து தபால் நிலைய துணை அலுவலர் சுமதி விளக்கி கூறினார். கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் தபால் நிலையத்தில் மின்கட்டணம், தொலைபேசி கட்டணம் செலுத்துதல், ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்தல், ஆதார் அட்டை வழங்குதல் போன்ற சேவைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. தபால்தலை பயன்பாடுகள் குறித்து எம்.டி.எஸ். அலுவலர் பெருமாள் எடுத்துரைத்தார். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மகேசுவரி ராஜசேகரன், அகாடமிக் டைரக்டர் ராஜ்குமார், அபிஷா ராஜ்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.