புத்தக திருவிழாவில் குவிந்த மாணவ-மாணவிகள்
தஞ்சை அரண்மனை வளாகத்தில் நடந்து வரும் புத்தக திருவிழாவில் குவிந்த மாணவ, மாணவிகள் விருப்பமான புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
தஞ்சை அரண்மனை வளாகத்தில் நடந்து வரும் புத்தக திருவிழாவில் குவிந்த மாணவ, மாணவிகள் விருப்பமான புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
புத்தக திருவிழா
புத்தகங்களை கையில் எடுத்து படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தை இலக்காக கொண்டு மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழா மற்றும் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சை அரண்மனை வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் கடந்த 14-ந் தேதி புத்தக திருவிழா தொடங்கியது.
புத்தக திருவிழாவில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கலை, இலக்கியம், வரலாறு, புராணம், இதிகாசம், சமுதாயம், நவீன இலக்கியம், தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம், சரித்திர நாவல்கள், சமூக நாவல்கள், அரசு வேலைவாய்ப்பு தேர்வுக்கான நூல்கள், ஆட்சிப்பணி தேர்வு தொடர்பான வழிகாட்டி புத்தகங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
அலைமோதிய கூட்டம்
புத்தக திருவிழாவை காண தினமும் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக மாவட்டம் முழுவதும் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் வந்து புத்தக கண்காட்சியை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். மேலும் மாணவ- மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் பயன்பெறும் வகையில் தினந்தோறும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் என ஆயிரக்கணக்கானோர் புத்தக திருவிழாவுக்கு வந்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இந்த புத்தக திருவிழாவில் 31-வது அரங்கில் 'தினத்தந்தி' பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த அரங்கிற்கு வந்து அங்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை எடுத்து பார்த்ததுடன் தங்களை கவர்ந்த புத்தகங்களையும் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
கலெக்டர்-போலீஸ் சூப்பிரண்டு
தஞ்சை கலெக்டர் தீபக் ஜேக்கப், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பலர் புத்தக திருவிழாவில் பங்கேற்று புத்தக தானம் செய்வோம், புது உலகம் படைப்போம் என்னும் பெட்டகத்தில் புத்தகங்களை தானமாக வழங்கினர். மேலும் தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை சார்பில் கூண்டுக்குள் வானம் என்கிற பெயரில் அமைக்கப்பட்டிருந்த அரங்கத்திற்கு கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் சென்று சிறைக்கைதிகள் படிப்பதற்காக அங்கே வைக்கப்பட்டிருந்த புத்தக தானப்பெட்டியில் புத்தகங்களை தானமாக போட்டனர்.
மாலையில் நகைச்சுவை-சிந்தனை அரங்கம் நடைபெற்றது. இதில் வாங்க பேசலாம் என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவும், சிரித்துக் கொண்டே ஜெயிக்கலாம் என்ற தலைப்பில் பேச்சாளர் ராஜ்மோகனும் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.