மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி செல்லும் அவலம்
அரிமளம் பகுதியில் மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி செல்லும் அவல நிலை உள்ளது. பள்ளி நேரங்களில் கூடுதலாக அரசு பஸ்களை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பஸ் வசதிகள்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளிகளில் அரிமளம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார குக்கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
காலையில் பள்ளிக்கு வந்து செல்வதற்கு போதுமான பஸ் வசதிகள் இல்லாததால் மாணவ-மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அரிமளத்திற்கு காலை 8 மணிக்கு அரசு பஸ்சும், அதையடுத்து 8.30 மணிக்கு தனியார் பஸ்சும், 8.45 மணிக்கு 27 நம்பர் டவுன் பஸ்சும், 9.30 மணிக்கு காரைக்குடியில் இருந்து திருச்சி செல்லும் அரசு பஸ்சும் செல்கிறது.
படிக்கட்டுகளில் பயணம்
பள்ளிகள் காலையில் 9.15 மணிக்கு தொடங்குவதால் மாணவ-மாணவிகள் கே.புதுப்பட்டியில் இருந்து காலை 8.45 மணிக்கு அரிமளம் வருகிற 27 நம்பர் தடம் எண் கொண்ட நகர பஸ்சில் அதிக அளவு மாணவ-மாணவிகள் பயணிக்கின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் படிகளில் தொங்கிக்கொண்டு செல்லும் அவல நிலையும் ஏற்படுகின்றது. கூலி வேலைக்கு செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் இதில் அதிக அளவு பயணிக்கின்றனர். இதனால் சில நேரங்களில் பஸ் நிறுத்தம் வரும்பொழுதும், வேகத்தடை வரும்போது மாணவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். இதனால் மிகப்பெரிய அசம்பாவித சம்பவம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்
எனவே காலை 8.15 மணியிலிருந்து 9.15 மணிக்குள் 2 நகர பஸ்சை கூடுதலாக இயக்கினால் மாணவ-மாணவிகள் பயணம் செய்ய ஏதுவாக அமையும். மேலும் மாணவ-மாணவிகள் பாதுகாப்பான பயணத்தையும் மேற்கொள்ள முடியும்.
இதுகுறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து துறையும் உயிர் இழப்பு ஏற்படும் முன்பு காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் கூடுதலாக புதுக்கோட்டையில் இருந்து ஒரு பஸ்சும், கே.புதுப்பட்டியில் இருந்து ஒரு பஸ்சும் என 2 நகர பஸ்களை அரிமளத்திற்கு இயக்க வேண்டும்.
கோரிக்கை
அதேபோல் மாலை 4.30 மணியிலிருந்து 5 மணிக்குள் கூடுதலாக அரசு பஸ்களை இயக்க வேண்டும். ஒரே நேரத்தில் பள்ளிகளில் இருந்து மாணவ-மாணவிகள் வீடு திரும்புவதால் குறிப்பிட்ட ஒரு பஸ் மட்டும் வருவதால் மாணவிகளால் குறிப்பிட்ட நேரத்திற்கு வீடு திரும்ப முடியவில்லை.
இதனால் மாலை நேரத்தில் நீண்ட நேரம் ஆகியும் வீடு செல்ல முடியாமல் இருட்டில் பஸ் நிறுத்தத்தில் காத்துக் கிடக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. எனவே பள்ளி மற்றும் வேலை நேரங்களில் கூடுதலாக அரசு பஸ்களை இயக்க வேண்டும் என பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.