விளையாட்டு பயிற்சியில் ஆர்வமுடன் சேர்ந்த மாணவ-மாணவிகள்


விளையாட்டு பயிற்சியில் ஆர்வமுடன் சேர்ந்த மாணவ-மாணவிகள்
x

கோடைகால விடுமுறையில் விளையாட்டு பயிற்சியில் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் சேர்ந்தனர்.

புதுக்கோட்டை

கோடைகால விடுமுறை

தமிழகத்தில் பள்ளிகளில் பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்த நிலையில் தற்போது கோடைகால விடுமுறை விடப்பட்டுள்ளது. இதில் மாணவ-மாணவிகள் கோடை கால விடுமுறையை கொண்டாட தொடங்கி உள்ளனர்.

இதுநாள் வரை புத்தக பைகளை சுமந்து கொண்டு தினமும் படிப்பு, படிப்பு என்று இருந்தவர்கள் தற்போது மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கின்றனர். ஒரு சிலர் பிற கலைகளை கற்கும் வகையில் அதற்கான பயிற்சியில் சேர்ந்துள்ளனர்.

நடனம், இசை, ஓவியம், யோகா உள்ளிட்டவற்றிலும் ஆர்வம் காட்டியுள்ளனர். மேலும் விளையாட்டுகளிலும் சேர்ந்து பயிற்சி பெறுகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து மற்றும் கையுந்துபந்து ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.

சான்றிதழ்

இந்த பயிற்சியானது வருகிற 15-ந் தேதி வரை காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் அளிக்கப்படுகிறது. இதேபோல பிற விளையாட்டுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பெற்றோரும், தங்களது குழந்தைகளை விளையாட்டில் சிறந்து விளங்கும் வகையில் விளையாட்டு பயிற்சியில் சேர்த்துள்ளனர். இதனால் மாவட்ட விளையாட்டரங்கத்தில் காலை, மாலைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. மேலும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இந்த விளையாட்டு பயிற்சியில் சேர்ந்ததன் மூலம் மாணவ-மாணவிகள் கோடை கால விடுமுறையை பயனுள்ளதாக கழித்து வருகின்றனர்.


Next Story