முதன்மை கல்வி அலுவலகத்தை மாணவ-மாணவிகள் முற்றுகை
அரசு பள்ளி அமைந்த பகுதிக்கு பஸ் வசதி கேட்டு, திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தை மாணவ-மாணவிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவ-மாணவிகள் முற்றுகை
திண்டுக்கல்லை அடுத்த கொட்டப்பட்டி, வடக்கு பாறைப்பட்டி, மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி, சோலைராஜாகாலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் தங்களுடைய பெற்றோருடன், திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
பின்னர் தாங்கள் பயிலும் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பஸ் வசதி கேட்டு, இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் முகேஷ் தலைமையில் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். மேலும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள், பெற்றோர்களிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பஸ் வசதி இல்லை
அப்போது மாணவ-மாணவிகள் கூறுகையில், மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வந்த அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எம்.வி.எம். அரசு பெண்கள் கல்லூரி அருகே உள்ள வசந்தம் நகருக்கு மாற்றப்பட்டது. அந்த பள்ளியில் கொட்டப்பட்டி, வடக்கு பாறைப்பட்டி, மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி, சோலைராஜாகாலனி பகுதிகளை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறோம்.
ஆனால் மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி பகுதியில் இருந்து அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதிக்கு அரசு பஸ் வசதி இல்லை. இதனால் நான்கு வழிச்சாலை, ரெயில்வே தண்டவாளம் ஆகியவற்றை ஆபத்தான முறையில் கடந்து பள்ளிக்கு செல்கிறோம். இவ்வாறு பள்ளிக்கு வரும் பாதையில் போதை ஆசாமிகளின் தொல்லை அதிகமாக இருப்பதால் அச்சமாக இருக்கிறது. எனவே மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி பகுதியில் இருந்து அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என்றனர்.
மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் சார்பில் முதன்மை கல்வி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் பள்ளி மாணவ-மாணவிகள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் முதன்மை கல்வி அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.