மாணவிகளை திட்டி வேலை வாங்குவதாக விளையாட்டு விடுதி பெண் நிர்வாகி மீது புகார்


மாணவிகளை திட்டி வேலை வாங்குவதாக விளையாட்டு விடுதி பெண் நிர்வாகி மீது புகார்
x

மாணவிகளை திட்டி வேலை வாங்குவதாக விளையாட்டு விடுதி பெண் நிர்வாகி மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்

பெரம்பலூரில் மாணவிகளுக்கான மாவட்ட விளையாட்டு விடுதி மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே உள்ளது. இதில் தங்கி விளையாட்டு பயிற்சி பெற்றுவரும் மாணவிகள், நேற்று தங்களது பெற்றோர்களுடன் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;-

எங்கள் விடுதி பெண் நிர்வாகி ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார். அவர் எங்கள் விடுதியிலேயே ஒரு அறையில் தங்கி வந்தார். எங்களுக்கு தரவேண்டிய உணவு படிகளை சரியாக தரவில்லை. மாணவிகள் பலரை தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். விடுதியில் பயிலும் மாணவிகளை, அவரது காலணிகளை சுத்தம் செய்து தரச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார். அவரது குழந்தையை பராமரிக்கச்சொல்லி வேலை வாங்குகிறார். அவரது அச்சுறுத்தலுக்கு பயந்து ஒரு மாணவி அடிக்கடி மயங்கி விழுந்துள்ளார். அவரை டாக்டரிடம் காண்பித்தபோது இதுபோன்று அடிக்கடி மயங்கி விழுந்தால், கோமா நிலை ஏற்படும் என்று டாக்டர் அறிவுரை வழங்கியுள்ளார்.

ஆபாச படம்

இதற்கிடையே அந்த விடுதி நிர்வாகி தனது சொந்த வேலைகளுக்கு உதவி செய்யுமாறும், அதற்காக மாதம் ரூ.500 தருவதாகவும் கூறி கட்டாயப்படுத்துகிறார். அதுமட்டுமின்றி ஜூனியர் மாணவிகளுக்கு ஆபாச படங்களை காட்டியும், அறுவறுக்கத்தக்க ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியும் திட்டுகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளையாட்டு விடுதி மாணவிகளிடம் உறுதி அளித்தார்.


Next Story