பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்


பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்
x

தஞ்சையில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

தஞ்சாவூர்

தஞ்சையில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பஸ்களில் கூட்ட நெரிசல்

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் மருத்துவக்கல்லூரி, வல்லம், திருக்காட்டுப்பள்ளி, நாஞ்சிக்கோட்டை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதில் தஞ்சை பழைய பஸ் நிலையம் முதல் புதிய பஸ் நிலையம் அங்கிருந்து மருத்துவக்கல்லூரி, வல்லம் போன்ற இடங்களுக்கு செல்லும் பஸ்களில் எப்போதும் கூட்டம் அதிகளவில் இருக்கும். குறிப்பாக காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் பஸ்களில் நிரம்பி வழியும் கூட்டத்தில சிக்கி பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

படிக்கட்டில் தொங்கியபடி பயணம்

அத்தகைய நேரங்களில் பஸ்களில் இடம் கிடைக்காமல் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்கிறார்கள். இந்த நிகழ்வு பல மாதங்களாக தஞ்சை பகுதியில் அரங்கேறி வருகிறது.

பள்ளி, கல்லூரிக்கு உரிய நேரத்துக்கு செல்ல வேண்டும் என மாணவர்கள் எப்படியாவது தொங்கியபடி பயணம் செய்கிறார்கள். ஆனால் மாணவிகளின் நிலையோ மிகுந்த பரிதாபமாக உள்ளது.

பெற்றோர்கள் வேதனை

மாணவர்கள் இவ்வாறு பயணம் மேற்கொள்ளும் போது பஸ்சின் பின்னால் ஏராளமான இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் செல்கின்றன.தொங்கி செல்லும் மாணவர்கள் ஒரு நொடி கையை விட்டாலும் அசம்பாவிதங்கள் அரங்கேறிவிடும் என்பதே நிசர்னம்.

பஸ்களில் தொங்கிக்கொண்டு மாணவர்கள் செல்வதை பார்க்கும் பெற்றோர்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகி வருகின்றனர். தங்கள் பிள்ளைகள் பள்ளி, கல்லூரிக்கு சென்று விட்டு பத்திரமாக வீடு வந்து சேர்ந்த பின்னரே அவர்கள் நிம்மதி அடைகிறார்கள்.

நடவடிக்கை வேண்டும்

மாணவர்கள் இவ்வாறு படிக்கட்டுகளில் தொங்கி்கொண்டு செல்வதற்கு போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படாததே காரணம் என்று மாணவ, மாணவிகளின் பெற்றோர் கூறுகிறார்கள். ஆனால் வழக்கம்போல இயக்கப்படும் பஸ்கள் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்தாலும், மாணவர்கள் கூட்டம் காலை, மாலை நேரங்களில் குறைந்தபாடில்லை.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும். மாணவர்கள் பஸ்படிகட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.


Next Story