சாத்தூர் அருகே அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்


சாத்தூர் அருகே அரசு கல்லூரி மாணவர்கள்   உள்ளிருப்பு போராட்டம்
x

சாத்தூர் அருகே அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் அருகே அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளிருப்பு போராட்டம்

சாத்தூர் அருகே மேட்டமலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆன நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரியாக செயல்பட்டு வந்தது. தற்போது கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக செயல்பட தொடங்கியுள்ளது.

இந்தக்கல்லூரியில் 720 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

கல்லூரியில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கூடுதல் பஸ் வசதி வேண்டும். கல்லூரி வளாகத்தில் உள்ள கழிப்பறைகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், சுற்றுப்புற சுவர் கட்டவும், விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும்.

கல்வி உதவித்தொகை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து தகவல் அறிந்த கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சூரியமூர்த்தி, சாத்தூர் துணை சூப்பிரண்டு நாகராஜன், வட்டாட்சியர் வெங்கடேஷ், மண்டல துணை வட்டாட்சியர் ராஜாமணி, கல்லூரி (பொறுப்பு) முதல்வர் முத்துக்குமார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புக்கு சென்றனர். போராட்டத்தின் போது 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

இதனைத்தொடர்ந்து கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசால் புதிதாக கொண்டுவரப்பட்ட கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான எழுத்து தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும். ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story