போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் சென்னை ஸ்டெல்லா கல்லூரி மாணவிகள்
போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் சென்னை ஸ்டெல்லா கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
உலக போதைப்பொருள் தடுப்பு தினத்தையொட்டி சி.ஐ.டி. அமலாக்க பணியகம் மற்றும் தமிழ்நாடு நாட்டு நலப்பணி திட்ட பிரிவு ஆகியவை இணைந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாக ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் சார்பில் சென்னையில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியின் முதல்வர் ஸ்டெல்லா மேரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, "போதைப்பொருள் பயன்படுத்துவதற்கு உறுதியாக வேண்டாம் என்று சொல்லவேண்டும். யோகா, தியானம் செய்வதற்கு வேண்டும் என்று சொல்லவேண்டும். இதன்மூலம் அழகான மற்றும் சமநிலையான வாழ்க்கையில் நேர்மறையானவை நிறைந்திருக்கும்" என்றார்.
பேரணியில் பங்கேற்ற மாணவிகள், 'போதைப்பொருளுக்கு வேண்டாம் சொல்லவேண்டும்' என்பது உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். ஜெமினி மேம்பாலத்தில் இருந்து பேரணி புறப்பட்டு, கல்லூரி வளாகத்தை அடைந்தது. பேரணியில் திட்ட அதிகாரி பேன்சி, 150-க்கும் மேற்பட்ட மாணவிகள், திட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.