தமிழக மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


தமிழக மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x

மத்திய அரசு கல்வி நிறுவனங்கள்- பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழக மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜனவரி மாதம் 31-ந் தேதி கடைசிநாள் ஆகும்.

பெரம்பலூர்

கல்வி உதவித்தொகை

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி மாணவ-மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் இருந்தால், அவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு ஆண்டிற்கு ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கலாம்

மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2022-23-ம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான மாணவ-மாணவிகள் சென்னை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தையோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship-schemes என்ற இணையதள முகவரியில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் மேற்படி நடப்பு நிதியாண்டிற்கான புதிதாக கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஜனவரி 31-ந் தேதி கடைசிநாள்

கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டிடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற ஜனவரி மாதம் 31-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு அலுவலகத்தை 044-29515942 என்ற தொலைபேசி எண்ணையும், tngovtiitscholarship@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story