திருப்பத்தூர் மாவட்ட மாணவர்கள் தங்கம் வென்று சாதனை
தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் திருப்பத்தூர் மாவட்ட மாணவர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் கன்னியாகுமரியில் தேசிய அளவிலான ஆண்கள், பெண்கள் சிலம்ப போட்டிகள் நடைபெற்றன. அதில் 1,600 மாணவ, மாணவிகள் 28 மாநிலங்களில் இருந்து கலந்து கொண்டனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் நாட்டறம்பள்ளியில் இருந்து மாதேஷ் சிலம்பம் அணி சார்பாக 25 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்றனர்.
வாணியம்பாடி பகுதியை சேர்ந்த மாணவர்கள் நிதிஷ்குமார், நிதின், சைலேஷ், சஞ்சய் ராஜு, மனோஜ் குமார், சதீஷ் ஆகிய மாணவர்கள் தங்க பதக்கங்களை பெற்றனர். ராகுல், திவ்யா ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
இதே போல் நாட்டறம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பிருந்தாவன் மெட்ரிக் பள்ளி, எஸ்.எஸ்.வி. மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 16 பதக்கங்களையும் பெற்றனர்.
உலக சிலம்ப போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சியாளர் மகேஷ் தலைமையில் வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில் குமார் எம்.எல்.ஏ. வை சந்தித்து வாழ்த்து பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எம்.எல்.ஏ. ஊக்கத்தொகை வழங்கினார். உடன் நகர செயலாளர் சதாசிவம், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் பாரதிதாசன், பேரூராட்சி செயலாளர் சரவணன், நகர மன்ற உறுப்பினர் ஹாஜியார் ஜகீர் அகமது, சதாம் உசேன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.