சேலம் மாவட்டத்தில் 94.22 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 94.22 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 94.22 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு
தமிழகம் முழுவதும் 2022-2023 கல்வியாண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி கடந்த மாதம் 3-ந் தேதியுடன் முடிவடைந்தது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 155 தேர்வு மையங்களில் இந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற்றது.
அதாவது, அரசு பள்ளி, மாநகராட்சி பள்ளி, உதவி பெறும் பள்ளி, உண்டு உறைவிட பள்ளி, தனியார் பள்ளிகள் என 323 பள்ளிகளில் இருந்து 17 ஆயிரத்து 733 மாணவர்களும், 19 ஆயிரத்து 528 மாணவிகளும் என மொத்தம் 37 ஆயிரத்து 261 பேர் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதினார்கள். அதன்பிறகு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது.
தேர்வு முடிவுகள்
நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. சேலம் மாவட்டத்திற்கான பிளஸ்-2 தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் பாலசுப்பிரமணியம் (சேலம்), தங்கவேல் (சங்ககிரி), உதயகுமார் (தனியார் பள்ளிகள்) சந்தோஷ் (தொடக்க-நடுநிலைப்பள்ளி) ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர்.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 16 ஆயிரத்து 300 மாணவர்களும், 18 ஆயிரத்து 809 மாணவிகளும் என மொத்தம் 35 ஆயிரத்து 109 பேர் தேர்ச்சி பெற்றனர். இது மொத்தம் தேர்ச்சி 94.22 சதவீதம் ஆகும். இதில், 91.92 சதவீதம் மாணவர்களும், 95.32 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 2,152 பேர் தேர்ச்சி பெறவில்லை. கடந்த ஆண்டு (2022) நடந்த பிளஸ்-2 தேர்வில் மாவட்டத்தில் 92.71 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது. இந்தாண்டு 1.51 அதிகம் பெற்று 94.22 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் தமிழக அளவில் பிளஸ்-2 தேர்ச்சி விகிதத்தில் கடந்த ஆண்டு 23-வது இடத்தை பெற்றிருந்த சேலம் மாவட்டம் இந்தாண்டு 5 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்கள்
மாவட்டத்தில் அரசு பள்ளிகளை பொறுத்தவரையில் 159 பள்ளிகளில் இருந்து 9 ஆயிரத்து 401 மாணவர்களும், 11 ஆயிரத்து 656 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 57 பேர் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதினர். இவர்களில் 8 ஆயிரத்து 266 மாணவர்கள், 11 ஆயிரத்து 13 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 279 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 90.88 சதவீதம் ஆகும். அதாவது, அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி 86.97 சதவீதம், மாணவிகள் தேர்ச்சி 94.80 சதவீதம் ஆகும்.