கல்வி உபகரணங்கள் வாங்க வாகனங்களில் பெற்றோருடன் குவிந்த மாணவர்கள்
பள்ளிகள் இன்று(திங்கட்கிழமை) திறப்பதை முன்னிட்டு கல்வி உபகரணங்கள் வாங்க வாகனங்களில் பெற்றோருடன் மாணவர்கள் குவிந்ததால் கும்பகோண கடை வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கும்பகோணம்:
பள்ளிகள் இன்று(திங்கட்கிழமை) திறப்பதை முன்னிட்டு கல்வி உபகரணங்கள் வாங்க வாகனங்களில் பெற்றோருடன் மாணவர்கள் குவிந்ததால் கும்பகோண கடை வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பள்ளிகள் இன்று திறப்பு
கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் பள்ளிகள் திறப்பதை தமிழக அரசு 10 நாட்கள் தள்ளி வைத்து உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று(திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ளது.கடந்த இரண்டு மாத காலமாக மாணவ-மாணவிகள் விடுமுறையை கழிப்பதற்காக தங்களது உறவினர் வீடுகளில் சென்று இருந்தனர்.
வெளியூர்களில் இருந்து கடந்த 2 நாட்களாக மாணவர்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். இந்த நிலையில் பள்ளி செல்வதற்கு தேவையான நோட்டு, பேனா, பென்சில், புத்தகப்பை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வாங்க நேற்று மாலையில் இருந்து கும்பகோணத்தில் உள்ள கடைகளில் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் குவிந்தனர்.
போக்குவரத்து நெரிசல்
கும்பகோணம் மையப்பகுதியான உச்சி பிள்ளையார் கோவில் தெரு, நாகேஸ்வரன் கோவில் வடக்கு வீதி, ஆயிகுளம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிக வாகனங்கள் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து கும்பகோணம் போலீசார் ஆங்காங்கே போக்குவரத்துக்கு தடையாக உள்ள வாகனங்கள், சாலையோரத்தில் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கும்பகோணம் நகரில் பல்வேறு வேலை நிமித்தமாக நகருக்குள் வந்த பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.