3 மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவர்கள் சாதனை
அருப்புக்கோட்டையில் 3 மணி நேரம் மாணவர்கள் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.
அருப்புக்கோட்டை,
தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனப்பணியிடங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பம் விளையாட்டை சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அருப்புக்கோட்டையில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வெற்றி சிலம்ப பயிற்சி பள்ளியை சேர்ந்த 56 மாணவர்கள் தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர். மாணவர்களின் சாதனையை அங்கீகரித்து மாணவர்களுக்கும், சிலம்ப பயிற்சி ஆசிரியர்களுக்கும், வேல்ர்டு ஸ்டார் புக் ஆப் ரெக்கார்டு அமைப்பு சாதனையை பதிவு செய்து பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கியது.
இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் அல்லிராணி, தமிழ் காந்தன், இளங்கோ, சிலம்ப பள்ளி ஆசிரியர்கள் கோபால், செல்வம், காஞ்சிவனம், தங்கப்பாண்டி, சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.