மாணவர்கள் அட்டகாசம்: கத்தி, அரிவாள் எடுத்து வந்தால் கடும் நடவடிக்கை: ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


மாணவர்கள் அட்டகாசம்: கத்தி, அரிவாள் எடுத்து வந்தால் கடும் நடவடிக்கை: ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x

ரெயில்களில் கல்லூரி மாணவர்கள் கத்தி, அரிவாள் எடுத்து வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன் மற்றும் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் தலைமையிலான ரெயில்வே போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள காத்திருப்பு அறைகள், நடைமேடைகள், ரெயில் பெட்டிகள் என அனைத்திலும் திடீர் சோதனை நடத்தப்பட்டது. சோதனைக்கு பிறகு ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரெயில்வே போலீசார் சார்பில் ரெயில்களில் கொண்டுவரும் தடை செய்யப்பட்ட பொருட்கள், கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள், சந்தேகப்படும் படியான நபர்கள் குறித்தும் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனைகள் அடிக்கடி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களாக ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களது வாழ்க்கை அவரவர் கைகளில் தான் உள்ளது. 'ரீல்ஸ்' வீடியோக்களுக்காக ரெயில்களின் மேலே ஏறுவது, ரெயிலின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது, கத்தி, அரிவாள் போன்ற பொருட்களை கொண்டு நடைமேடைகளில் விபரீத சாகசம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இவை அனைத்தும் சட்டப்படி குற்றம், பெற்றோர்கள் பாடுபட்டு படிக்க வைப்பதை மாணவர்கள் கருத்தில் கொண்டு இது போன்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இவ்வாறு ஈடுபடும் மாணவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். முதலில் விழிப்புணர்வு அளிக்கும் வகையில் ஆலோசனை வழங்குகிறோம். அதை மீறி இந்த செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.


Next Story