உயிரை பணயம் வைத்து கல்வி கற்கும் மாணவர்கள்
தலைக்குமேல் கத்தி தொங்குவது போல் பள்ளி வகுப்பறை மேற்கூரை இருப்பதால் உயிரை பணயம் வைத்து மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
சின்னசேலம் அருகே அம்மகளத்தூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், இந்த பள்ளியின் வகுப்பறை கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. மேலும் வகுப்பறையின் மேற்கூரை சிமெண்டு காரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுந்து வருகின்றன. இதனால் மாணவர்கள் பெரும் அச்சத்துடனே கல்வி பயின்று வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த இளங்கோவன் என்பவர் கூறுகையில், பள்ளி கட்டிடம் சேதமடைந்தது குறித்து கலெக்டருக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு புகார் அளித்தோம். இதையடுத்து வட்டார கல்வி அலுவலர் நேரில் வந்து சேதமடைந்த கட்டிடங்களை பார்வையிட்டார். பின்னர் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இது குறித்து ராஜேந்திரன் என்பவர் கூறுகையில், பள்ளி வகுப்பறையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து வருகின்றன. இருப்பினும் வேறு வழியின்றி உயிரை பணயம் வைத்து மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குவது போல் மேற்கூரை சிமெண்டு காரைகள் உள்ளது. எனவே கட்டிடம் இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்படும் முன் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.