மாணவர்கள் பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்


மாணவர்கள் பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்
x

தீபாவளியையொட்டி பள்ளி மாணவர்கள் பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அப்துல்பாரி கூறினார்.

வேலூர்

தீபாவளியையொட்டி பள்ளி மாணவர்கள் பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அப்துல்பாரி கூறினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேலூர் தீயணைப்பு நிலையம் சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து சைதாப்பேட்டை கோடையிடி குப்புசாமி அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன், பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைமை ஆசிரியை கலாவதி வரவேற்றார்.

நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அப்துல்பாரி தலைமை தாங்கி பேசியதாவது:-

தீபாவளி பண்டிகை ஓரிரு நாட்களில் கொண்டாடப்பட உள்ளது. பள்ளி மாணவர்கள் இந்த தீபாவளியை விபத்தில்லா தீபாவளியாக கொண்டாட வேண்டும். குறிப்பாக பட்டாசுகளை பாதுகாப்புடன் வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு தீ வைக்கும் போது நீளமான ஊதுபத்தியை பயன்படுத்த வேண்டும்.

பாதுகாப்பாக பட்டாசுகளை...

பட்டாசு வெடிக்கும் இடத்தின் அருகே குடிசை வீடு, வைக்கோல் மற்றும் எளிதில் தீப்பற்றி எரிய கூடிய பொருட்கள் உள்ளதா என்று பார்த்துவிட்டு வெடிக்க வேண்டும். அரசு அனுமதி அளித்துள்ள நேரத்தில் விளையாட்டு மைதானம், திறந்தவெளியில் பட்டாசுகளை வெடிப்பது நல்லது.

கம்பி மத்தாப்பு பற்ற வைத்துவிட்டு எரிந்த கம்பியை தரையில் வீசாமல் தண்ணீரில் போட வேண்டும். மத்தாப்பு, சங்கு சக்கரம் போன்றவை வெடிக்காது என்று அலட்சியமாக அதன் அருகே நிற்பதை தவிர்க்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது எதிர்பாராதவிதமாக உடலில் காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் பட்டாசுகளை பாதுகாப்பாக எப்படி வெடிக்க வேண்டும் என்றும், சமையல் செய்யும் போது எண்ணெய் பாத்திரங்களில் தீப்பற்றினால் அதனை அணைப்பது குறித்தும், வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் வெள்ளங்களில் மூழ்கினால் செய்ய வேண்டிய முதலுதவி பற்றியும் செயல்முறை விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். முடிவில் பள்ளி துணை தலைமை ஆசிரியர் சுப்பிரமணி நன்றி கூறினார்.


Next Story