அறிவியல் படைப்புகளை உருவாக்க மாணவர்கள் முன்வர வேண்டும்
அறிவியல் படைப்புகளை உருவாக்க மாணவர்கள் முன்வர வேண்டும் என்று வானவில் மன்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
நாகர்கோவில்:
அறிவியல் படைப்புகளை உருவாக்க மாணவர்கள் முன்வர வேண்டும் என்று வானவில் மன்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
வானவில் மன்றம்
குமரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கான வானவில் மன்றம் தொடக்க நிகழ்ச்சி நாகர்கோவில் டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பேசியபோது கூறியதாவது:-
அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ரூ.25 கோடி செலவில் "வானவில் மன்றம்" என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அதோடு 100 நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வக வாகனத்தையும் தொடங்கி வைத்துள்ளார்.
அறிவியல் படைப்புகள்
இந்த திட்டத்தின் வாயிலாக 95 நடுநிலைப் பள்ளிகள், 77 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 59 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 231 பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 20,621 மாணவ-மாணவிகள் பயன்பெறுவார்கள். மேலும், பள்ளி மாணவ, மாணவியர்கள் ஏன், எதற்கு, எப்படி என்ற புரிதலுடன் அறிவியல் மற்றும் கணிதம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களை கற்றுக்கொள்ள முன்வர வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகள் அறிவியல் படைப்புகளை உருவாக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, ஐ.நா. சபையில் மாணவர் இயக்கஆசிய பசிபிக் தூதுவர் சுல்தான், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் (பொறுப்பு) ஜீனா ஜேம்ஸ், தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) சுபானாந்தராஜ், இடைநிலைக்கல்வி அலுவலர் மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.