மாணவர்கள் உடலையும், மனதையும் பக்குவப்படுத்த வேண்டும்
விளையாட்டு துறையில் மாணவர்கள் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
நாகர்கோவில்:
விளையாட்டு துறையில் மாணவர்கள் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
கால்பந்து போட்டி
போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவை மேம்படுத்தும் விதமாகவும், இளைஞா்கள் போதைப் பொருளை உபயோகிக்கும் தவறான பாதைக்கு செல்லாமல் விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் குமரி மாவட்ட போலீஸ் துறை சார்பில் கால்பந்து போட்டிகள் நடத்த முடிவு செய்தது.
அதன்படி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் போட்டிகள் தொடங்குகிறது. இதற்கான அறிமுக நிகழ்ச்சி நேற்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.
விளையாட்டு துறையில் சாதனை
விழாவில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
போதை பழக்கத்திற்கு இளம் தலைமுறையினர் தற்போது அடிமையாகி வருவது வேதனை அளிக்கிறது. போதைப் பொருள் போன்ற பழக்கத்தில் இருந்து விடுபட்டு விளையாட்டுகளில் ஆர்வம் காட்ட வேண்டும்.
விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று உடலையும், மனதையும் பக்குவப்படுத்த வேண்டும். கல்வியுடன் விளையாட்டுக்கும் மாணவர்கள் முன்னுரிமை வழங்கி விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
54 அணிகள் பங்கேற்பு
நிகழ்ச்சியில் நெல்லை சரக டி.ஜ.ஜி.பிரவேஷ் குமார், நெல்லை கமிஷனர் அபினேஷ் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஹரிகிரண் பிரசாத் (குமரி), சரவணன் (நெல்லை) மற்றும் போலீசார், கால்பந்து அணிகள், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போட்டியில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 54 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.25 ஆயிரமும், 3-வது பரிசாக கோப்பையும் வழங்கப்பட உள்ளது.