மாணவர்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்
மாணவர்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
வழிகாட்டுதல் நிகழ்ச்சி
தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் மக்கள் மறுமலர்ச்சி தடம் சார்பில் விழுதுகளை வேர்களாக என்ற தலைப்பில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மக்கள் மறுமலர்ச்சி தடம் மண்டல ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர் ராமச்சந்திரன் வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:-
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவில் கடந்த ஆண்டு கடைசி இடத்தில் இருந்த வேலூர் மாவட்டம் 2½ சதவீதத்துக்கும் அதிகமாக தேர்ச்சி பெற்று இந்த ஆண்டு ஒரு இடம் முன்னேறி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் கல்வியாண்டுகளில் பொதுத்தேர்வில் இன்னும் அதிகமான தேர்ச்சி விகிதம் பெற்று மேலும் பல இடங்கள் முன்னேறுவதற்கு முயற்சிகள் செய்வோம். இது பள்ளி கல்வித்துறைக்கும், ஆசிரியர்களுக்கும் காத்திருக்கும் சவாலாகும்.
சிறந்து விளங்க வேண்டும்
பிளஸ்-2 முடித்துள்ள மாணவர்களாகிய நீங்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். கல்வி இன்றியமையாத ஒன்றாகும். இன்றைய காலக்கட்டத்தில் கல்வி கற்றால் சமுதாயத்தை முன்னேற்றும் குடிமக்களாக திகழலாம். கல்வியை யாரும் திருடவோ, கொள்ளையடிக்கவோ முடியாது. மாணவர்கள் கல்வி கற்க அரசு பல்வேறு வசதி, வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறது. அதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தொடர்ச்சியாக படித்து விஞ்ஞானிகளாவும், அறிஞர்களாவும் வர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அரசு வழிகாட்டுதல் வழங்கி கொண்டிருக்கிறது. மாணவர்கள் மருத்துவம் படித்து டாக்டரானால் இந்த சமுதாயம் நோயற்ற சமுதாயமாக இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும். பணம் சம்பாதிப்பது 2-ம் பட்சமாக இருக்க வேண்டும். என்ஜினீயரானால் தரமான கட்டிடங்கள் அல்லது தரமான மென்பொருளை உருவாக்க வேண்டும். மாணவர்களின் எண்ணம் சமுதாயத்தை முன்னேற்றுவதாக இருக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
அதைத்தொடர்ந்து உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து பேச்சாளர்கள் விஜயகுமார், பெல் சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் ஆகியோர் பேசினர். அவர்களிடம் மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை கூறி தெளிவு பெற்றனர். இதில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பிளஸ்-2 பயின்ற மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் குடியாத்தம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் சந்தோஷ் நன்றி கூறினார்.