மாணவர்கள் எந்த சூழலிலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது
மாணவர்கள் எந்த சூழலிலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து தொகுதி எம்.எல்.ஏ.வும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று கலெக்டர் பிரதீப்குமாரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார். பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவெறும்பூர் தொகுதியில் முக்கிய பிரச்சினையாக பட்டா பிரச்சினை இருக்கிறது. மேலும், தொகுதியில் வேலை வாய்ப்பு முகாம்களும் நடத்த கோரிக்கை விடுத்துள்ளோம். திருச்சி-துவாக்குடி அணுகுசாலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இது தொடர்பாக அணுகுசாலை மீட்பு குழுவினர் சமீபத்தில் என்னை சந்தித்து பேசினார்கள். அணுகுசாலை அமைப்பது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இலவசங்கள் வழங்குவதை வேறு கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது. இலவசங்களை சமூக நீதியாகத்தான் பார்க்க வேண்டும். சமூக நீதி என்பது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். பணம் இருப்பவர்களுக்கு ஒரு கல்வி, பணம் இல்லாதவர்களுக்கு ஒரு கல்வி என்று இருக்கக்கூடாது. எல்லோருக்கும் சமத்துவமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். 'நீட்' தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்து இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.
'நீட்' தேர்வை ரத்து செய்ய சட்ட போராட்டம் ஒருபக்கம் நடந்தாலும், 'நீட்' தேர்வு இருக்கும் வரை மாணவர்களை தயார் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மனரீதியாகவும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் உயர்கல்வி வழிகாட்டு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அங்கு கவுன்சிலிங் எடுத்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி ஹெல்ப் லைன் எண்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் பல மாணவர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
எந்த சூழலிலும் மாணவர்கள் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது. உயிரை மாய்த்து கொள்ளும் வேலையில் ஈடுபட வேண்டாம். அதனால் நீங்கள் ஒன்றும் சாதிக்கப்போவது இல்லை. மாறாக பெற்றோருக்கும், இந்த சமூகத்துக்கும் நீங்கள் கவலையை கொடுத்துவிட்டு செல்கிறீர்கள் என்பதே உண்மை.
'நீட்' தேர்வை ரத்து செய்ய ஒட்டுமொத்த கட்சி வேறுபாட்டை கடந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி வரை கொண்டு சென்று இருக்கிறோம். சமீபத்தில் கேரளா வந்த உள்துறை மந்திரி அமித்ஷாவிடமும் 'நீட்' தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளோம். நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.